அருப்புக்கோட்டை நாடார் கல் கோவில் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் சமேத ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் திருக்கோவில் ஆலய வரலாறு :
பாரதத்தில் சிறந்த தென்நாட்டினில் பாண்டிய வளநாட்டில் பசுமை நிறைந்த வில்வ வனச் தேத்ரமாகிய திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை திருப்பதிகையில் பிரம்மா, விஷ்ணு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள். நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகள் முதல் வரும் உயிரணைத்தையும் வாழ்விக்க எண்ணி அமுதமயமாய் அழகிய திருஉருவோடு விமலமார் பரம்பொருள் யாமென, ஆதிபராசக்தி துவரிதழ் கொடியிடை அம்மையாம் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் சமேத ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் பசுமைமாறா வில்வ மரத்தடியில் யாரும் அறியாமல் தோன்றாமல் தோன்றினார்.
1856 ஆம் ஆண்டு வாழ்ந்த தன வணிகரும், பெரும் நிலக் கிழாருமான க்ஷத்ரிய குலத் தோன்றல் தெய்வத்திரு மகனாகிய நாடார் குலத்திலகம் ஸ்ரீ மான் முதலாளி மு.முத்துச்சாமி நாடார் அவர்கள் கனவில் இறைவன் தோன்றி “அன்ப நிவிரும் நும் க்ஷத்ரிய குலமும் மேன்மயுடன் விளங்குவீர்கள். நிலமும், சூரியனும் உள்ளவரை உங்கள் குலம் விளங்க யாம் அருள் வழங்குகிறோம்.யாம் இருக்குமிடத்தில் ஓர் கற்றளியமைத்து அதில் அமுதலிங்கமாக எம்மை பிரதிஷ்டை செய்வீர்களாக“ என்று திருவாய் மலர்ந்தருளினார். தான் கனவில் கண்ட இடத்தையும், வில்வ மரத்தையும் காண ஆர்வம் கொண்டு தன் பந்தங்களுடன் அந்த அடர்ந்த வில்வ வனத்தில் அலைந்து கண்டுபிடித்து “ நமசிவாயம், நமசிவாயம் என்று ஆனந்த கூத்தாடினார். அந்த வில்வ மரத்தடியைத் தோண்ட ஆயிரம் சூரிய ஒளியினை ஒருங்கே கொண்ட லிங்க வடிவமாக ஸ்ரீ அமுதவிங்கேஸ்பரர் மிகப் பிரகாசமான ஒளியுடன் திருக்காட்சியருளினார்,
சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக கருதப்பட்ட நமது சமூகத்தினர் சிவாலயங்களில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டு வந்தனர். அவ்வாறு இருந்த காலகட்டத்தில் அனைவராலும் ஆச்சரியப்படும் வண்ணம் சிவாலயத் திருப்பணியைத் துவங்கி “என் கடன் இறைப் பணி செய்வதே“ என்று விரதமேற்றுக் கொண்டு கோவில் பன்னெடுங்காலம் பழுதுறாவண்ணம் கற்கோவிலாக கட்டி முடிக்க அருப்புக்கோட்டை க்ஷத்திரிய குல நாடார் பெருமக்கள் முடிவு செய்தனர்.
மார்க்கண்டேய புராணம், லிங்கபுராணம் மற்றும் நீலகண்ட புராணம் ஆகியவை “சிவனின் 1008 திருஉருவங்களிலும் முதன்மையானதும், அதிக சக்தியானதும் அனைத்திலும் சிறந்ந்தது ஸ்ரீ அமுதலிங்கமே யாகும்“ என கூறுகின்றன. தேவர்களுக்கு துருவாசர் இட்ட சாபம் நீங்க தேவர்களும், அசுரர்களும் மேரு மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்து அமிழ்தம் எடுக்க விழைகையில் வாசுகி நாகம் தான் அதுவரை சேர்ந்து வைத்திருந்த ஆலகாலம் எனும் விஷத்தை தேவர்களை நோக்கி உமிழ்ந்தது. அந்த விஷமானது தேவர்களைத் தாக்காத வண்ணம் சுந்தரர் உதவியோடு சிவனே உண்டு விழுங்கினார்.அன்னை பராசக்தி தன் சக்தியினால் அவ்விஷத்தை சிவனின் கண்டத்தில் நிறுத்தினார் என நீலகண்ட புராணமும் பின்பு “பாற்கடலில் தோன்றிய அமுதத்தை அன்போடும் தேவர்களுக்கு வழங்கி துருவாசர் சாபம் நீங்கச் செய்து நல்வாழ்வு வழங்கி, ஸ்ரீ அமுதலிங்கமாக காட்சி தருகின்றார்“ என லிங்க புராணமும் கூறுகின்றது. அத்தகைய முதன்மை லிங்கமாகவே சிவன் வில்வ மரத்தடியில் யாரும் அறியாத வண்ணம் அழகிய திருஉருவுடன் தோன்றி அருள்பாலித்து வருகின்றார்.
இத்திருக்கோவிலை 54000 சதுரடி நிலப்பரப்பினில் அமைக்க அருப்புக்கோட்டை க்ஷத்திரிய நாடார்கள் முடிவெடுத்தனர். வேத ஆகம வித்தகர்கள் அறிவுப்படியும். சிற்பகலை வல்லுனர்கள் கொண்டும் பார்த்தவர் பிரம்மிப்பைடையும் படி அழகின் திருவுருவாய் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் திரு உருவச்சிலையை உருவாக்கினர். இன்று வரதராஜ பெருமாள் சன்னதி இருக்கும் இடத்தில் முதன்முதலாக ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரரையும், ஸ்ரீ அமுதவல்லி அம்மனையும் பாலாயம் செய்தனர். கடினமான மேடு பள்ளங்கள் நிறைந்த இத்தலத்தினில் மதில் சுவர்களின் அஸ்திவாரம் 20 அடி ஆழத்திற்கு தோண்டப் பெற்று அதை நிரப்பும் பணி 10 ஆண்டுகள் நடைபெற்றது. 20 அடி ஆழத்திற்கும் பலவகையான உறுதியான கற்களாலும் அரைத்த சுண்ணாம்பு கொண்டு உருவாக்கினர். ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பிற்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என அன்றே முன்னோர்கள் தயாரித்த திட்ட விளக்க வரைபடம் இன்றும் நம் கோவிலில் இருக்கின்றது. அதனால் ராஜகோபுர அஸ்திவாரம் மட்டும் பனை மர உயரத்திற்கு தோண்டி மூடப்பட்டுள்ளது. மேலும் ஆலய அமைப்பின் சிறந்த வல்லுனர்களின் அறிவுரைப்படி மூன்று பிரகாரங்களாக அமைத்து அதனைக் கட்டுவதற்கு தரமான கற்களை கொண்டு வர முன்னோர்கள் படாதபாடு பட்டனர் என்பது உறுதி.
கடினமான இந்த திருப்பணியினை அருப்புக்கோட்டையைச் சூழ்ந்துள்ள 56 பகுதி க்ஷத்திரிய குல நாடார்களின் கடினமான கூட்டு உழைப்பால் தொடர்ந்து உருவாக்கப்பட்டது தான் இத்திருக்கோவிலாகும். இதனை ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் ஆலய முதல் சுற்றுப் பிரகாரத்தின் தெற்கிலுள்ள மகா மண்டபத்தின் வெளிப்புற சுவரில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டினால் அறியலாம்.
1866 முதல் 1887 வரை ஸ்வாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் திட்டமிட்டபடி திருப்பணிகள் செய்தனர். அருப்புக்கோட்டை நகர் அப்போது இராமநாபுரம் சமஸ்தானத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தது. நம் சமுதாயத்தினர் மன்னர் அனுமதி இன்றி சிவாலயம் கட்டுவதாக சில இனத்தார் மன்னரிடம் புகார் செய்தனர். 1896 ஆம் ஆண்டு மானாமதுரை டி.மு. கோர்ட்டில் அவர்கள் பிராது செய்ய,கோவில் கட்டுவதை நிறுத்தும்படி சமஸ்தானத்திலிருந்து உத்தரவு கொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மன்னர் உயர்திரு. பாஸ்கர சேதுபதி அவர்கள் தன் அரண்மனையில் மகா நவமியைச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அவ்விழாவில் மன்னரைப் புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் செல்வது வழக்கம். ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரரின் பெருமைகளையும், சிறப்புகளையும் நன்கு உணர்ந்த அரன்வாயல் புலவர் வேங்கட சுப்பு பிள்ளை அவர்களும் மன்னரைக் காணச் சென்றார். தன்னை மிகவும் கவரும் பாடல் ஒன்றைப் பாடினால் அவர் கேட்கும் வரங்களை அளிப்பதாக மன்னர் வாக்களித்தார். இதையே தக்க வாய்ப்பாகப் பெற்ற கவியரசு:-
“பாட்டினைப் பாடும் பாவலர்க்கிளவை பாட்டினைக்
கொடுத்துளம் கருணை புரிவாய்
நாட்டினைக் கொடுத்தும் நகரினைக் கொடுத்தும்
நனியவர் வாழ்ந்திடக் குலவு
தேட்டினைக் கொடுத்தும் நின் புகழ் பேசும்
மிக்க சான்றோர் வாழ் அருப்புக்
கோட்டையில் ஓங்கு சிவாலயம் வளரக்
கொற்றவை கிருபை செய்குவையே“ என்று பாட, அதைக் கேட்ட மன்னர் மனம் மகிழ்ந்து திருப்பணியைத் தொடர உத்தரவு கொடுத்தார். 1898 ஆம் ஆண்டு நம் நகர் க்ஷத்திரிய நாடார்கள் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களுக்கு ஊர்வலமாய்ச் சென்று மாலை அணிவித்துச் சிறப்பு செய்தனர்.
இதனை:-
“கடைந்த கோது பாற்கடலில் பொங்கி வந்த
கொடிய ஆலகால நஞ்சை உண்ட நாதர்
உடையவள் அமுதவல்லி திறத்தினாலே
அமுத லிங்க ஈஸ்பரராய் ஒளிரக் கண்டோம்
தடைகள் பலவும் திருப்பணிக்கு வந்த போதும்
தரணியாளும் லிங்கேசர் அருளினாலே
கொடை வள்ளல் சேதுபதி புலமை போற்றி
கோவில் நற்றிருப்பணிக்கு வாழ்த்தும் தந்தார்“
என்ற பாடல் மூலம் அறிகின்றோம்.
மிகுந்த உற்சாகத்துடன் நம் குல மக்கள் இறைப்பணியைத் திட்டமிட்டபடி செய்தனர்.கல் தச்சுப்பணி தொடங்கப்பட்டு, சிற்றுளியின் ஒலி எங்கும் கேட்டது. தொடர்ந்து திருப்பணிகள் பெருகப் பெருக சிவாலயப் பணியில் நம் மக்கள் ஒன்றி விட்டனர். ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் சன்னதி மற்றும் ஸ்ரீ அமுதவல்லி அம்மன் சன்னதித் திருப்பணிகள் முடிவுற்று 24.4.1907 ம் நாள் மஹா கும்பாபிஷேகம் பெருவிழா தரணி காணச்சிறப்புடன் நடைபெற்றுள்ளது.அன்றைய கும்பாபிஷேகப் பத்திரிக்கை இன்றும் திருக்கோயிலில் உள்ளது.
கும்பாபிஷேகப் பெருவிழாவிற்குப் பின்னர் தேவதச்சனும் போற்றும் வண்ணம் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு ஆலயப்பணி வளர்ந்தோங்கியது. ஸ்வாமி சன்னதியில் ஆறு கால் மண்டபம், மணி மண்டபம், பந்தா மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடம், கொடி மரம், அம்மன் சன்னதியில் ஆறுகால் மண்டபம் என்று திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. திருப்பணிகள் தொடர்ந்ததுடன் சிவாலயத்தில் நடைபெற்று வரும் அத்தனை விழாக்களுக்கும், பூஜைகளுக்கும் கட்டளைகள் ஏற்படுத்தி தவறாமல் நடைபெற்று வருமாறு செய்துள்ளனர். ஆலய வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவர சிற்றுளிச் சத்தம் இன்றும் கேட்டுக்கொண்டேயுள்ளது.
No comments:
Post a Comment