Monday, June 8, 2015

பதிவு 4 - சான்றோர்களே சத்திரியர்கள்...

சான்றோர்களே சத்திரியர்கள்...



சான்றோர் என்ற உடனே நமக்கு என்ன தோன்றுகிறது?
இன்றைய சமூகம் யாரைச் சான்றோர் என்கிறது?
சால்புள்ளவரை ,அறிஞரை ,அறிவிற்ச் சிறந்த பெரியோர் களை ,நல்லொழுக்கம் உள்ளவர்களை சான்றோர்கள் என நமக்கு இன்றைய சமூகம் அடையாளம்  காட்டுகிறது.
இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் நமக்கு நம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,பெரியவர்கள் என இச்சமூகம் கற்று கொடுத்ததே, அதன் மூலமே நாம் ஒரு சொல்லிற்கு பொருள் கொள்கிறோம். ஆசிரியர் இது பறவை என்று சொல்லித் தந்தாலே நாம் பறப்பனவற்றை பறவை என்கிறோம். ஒருவேளை அது மிதவை என்று சொல்லித் தந்திருந்தால் நாம் மிதவை என்றே கூறியிருப்போம் மறுப்பதற்க்கில்லை.
இன்று நாம் கற்றுத் தேர்ந்தவரை எல்லாம் சான்றோர் என்கிறோம் ,இச்சமூகம் நமக்கு அப்படியே அடையாளம் காண்பிக்கிறது. பண்டைய காலத்தில் சான்றோர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகப்பெயராகவே  இருந்தது என்றால் நம்ம முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை.
ஆதாரங்கள் உள்ளன..

தமிழகத்தில் சத்திரியர் கிடையாது என்பது மடமை என்று முந்தைய பதிவுகளில் தெரிந்து கொண்டோம்.சங்கநூல்களில் பிராமணர் என்ற வட சொல் அந்தணர் ,பார்ப்பார் எனவும். ஷத்திரியர் என்ற வடசொல் சான்றோர்,சான்றார் ,சான்றான் எனவும் எழுதப்பட்டுள்ளதை காணலாம்.
சால்பு என்ற சொல்லுக்கும் ஊக்கம், மாட்சிமை, மேன்மை Superiority. Dignity என அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆட்சி செய்தோருக்குச் சால்பு தேவைப்பட்டது. மக்களை வழிநடத்தி அரசுசெலுத்திய சத்திரியருக்கு வீரத்துடன் ஊக்கம்,நேர்மை, பொறுமை போன்ற குணநலன்கள் இருந்தன. ஆகையாலே முன்னாளில் ஆட்சிக்குடியினரான சத்திரியர்களையே தமிழில்  சான்றார் என்றனர்.

கல்வி, ஒழுக்கம் பெற்று நாகரிக பண்பட்ட வாழ்கையை அரசகுலமே மேற்கொண்டிருந்தது.கல்வி,செல்வம்,நாகரிகம்,பண்பாட்டில் பின்தங்கி இருந்த பல்வேறு இன மக்களுக்கும் சான்றாரே “வழிகாட்டிகளாக” விளங்கினர்.

“வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே,
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான்

- தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் 93’வது சூத்திரம்.

அதனால் ஒருவனை ஒழுக்கத்திலும் ,பண்பிலும்,கல்வியிலும், போர்த்திறனிலும் உயரவேண்டும் என உணர்த “சான்றோனாகுக” (சான்றானைப் போலாகுக) என்று வாழ்த்தினர். பிற்காலத்தில் வேறுசில குலத்தவரும்,வர்ணத்தாரும் ஆட்சிக்கட்டிலேறிய பின்னர் கற்றுப் பண்புள்ள பெரியவர்களைச் சான்றோர் எனக் கூறும் வழக்கம் உண்டாயிற்று .அதையே இன்றைய சமூகம் நமக்கு, கற்றுத் தேர்ந்தவர்களையே சான்றோர் என்று கூறுகிறது.
ஆனால் உயர்குடிபிறந்தாரே சான்றாண்மை உடையோர்,சான்றாரே ஒழுக்கத்தின் சான்று எனப் பல்வேறு சங்க நூல்களும் உணர்த்துகின்றன.

1.)    “’சான்றாண்மை சாயா லொழுக்க மிவைமூன்றும்
வான்றோய் குடிபிறந்தார்க் கல்லது....” – நாலடியார்

2.)    “நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர்” எனவும்
             “வான்தோயும் மலையன்ன சான்றோர்” எனவும் புறப்பொருள் வெண்பாமாலை (173, 185) புகழ்கிறது.
3.)    “குலம்மேம்பட்ட சான்றோர் மகனே” எனப் 10ம் நூற்றாண்டுப் பாடல் கூறுவதும் இதனை உறுதிப்படுத்துகிறது. (தமிழ்நெறி விளக்கம், பொருளியல் உரை பக் 45)


சான்றோர் சத்திரிய குலத்தினர்.

தமிழின் மிகத்தொன்மையான நூலான தொல்காப்பியம் என்ன கூறுகிறது ? கற்றுத்தேர்ந்தொரைச் சான்றார் என்று கூறுகிறதா? அல்ல, சான்றோர் என்ற சொல் அரசகுலத்தவர், உயர் குடியினர் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது.
கீழ்காணும் சூத்திரங்களால் அதை உணரலாம்.

1.)    “அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும்”
- தொல்காப்பியம்,பொருளதிகாரம் மரபியல் 77வது சூத்திரம்.

அந்தணர் என வர்ணத்தை குலத்தைக் கூறி,அடுத்து சான்றோர் எனக் கூறியுள்ளமை வர்ணத்தை,குலத்தையே ஆகும்.


2.)    “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபினர் அரசர் பக்கமும்
இருமூன்று மரபினர் ஏனோர் பக்கமும்”
- தொல்காப்பியம்,பொருளதிகாரம் புறத்திணையியல் 2௦ 1-3.

என அந்தணர் ,அரசகுலமான சத்திரியர் மற்றும் வைசியர் ,சூத்திரர் ஆகிய நால்வர்ணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சூத்திரத்தில்.

“துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கட்டில் நீத்த பாலிநாறும்
எட்டுவகை நுதலிய அவையத்தானும்”
எனக் கூறப்பட்டுள்ளது. முதற் சூத்திரத்தில் அரசர் பக்கமும் எனக்கூறி, அடுத்த சூத்திரத்தில் அரசர்குலத்தினை சான்றோர் பக்கமும் எனக் கூறியுள்ளது  எண்ணுக

3.)    “எல்லா பார்ப்பாரும் எல்லாச் சான்றாரும்”
 - தொல்காப்பியம்,சொல்லதிகாரம் பெயரியல் 33வது சூத்திரம்.

4.)    எல்லாக் கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும்”
-தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்,புள்ளிமயங்கியல் ,28வது சூத்திர உரை .நச்சினார்க்கினியர்.

5.)      “சான்றோர் மாதைத் தக்க வரக்கன் சிறைதட்ட
 ஆன்றோர் சொல்லும் நல்லற மன்னான் வசமானால்...”
- கம்பராமாயணம்,யுத்த காண்டம்,  பிரமோத்திரப் படலம்,215வது பாடல்.

இந்த இராமயணப் பாடலில் ,இங்கு சான்றோர் மாது என்றது, ஜனகனின் மகளானச் சீதையை. ஆகவேச் சான்றோர் மாது என்றதன் பொருள் அரசகுலப் பெண் என்பதாகும். சான்றோர்குலம் –அரசகுலம் (சத்திரிய குலம்)

6.)    அந்தணர் வணிகர் வேளாண்மரபினர் ஆலிநாட்டுச்
சந்தணிபுயத்து வள்ளன் சடையனே அனைய சான்றோர்”
எனத் தனிப்பாடல் ஒன்றில் கம்பன் கூறுகிறான்.அந்தணர்,வணிகர், வேளார் என் மூவகை வர்ணத்தைக் கூறிய கம்பன்,சத்த்ரியரைச் சான்றோர் எனக் கூறியுள்ளமை, சான்றோர் என்பார் சத்திரியர்,அரசகுலத்தவர் என்பதைத் தெளிவாக கட்டுகிறது.

7.)    “தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே”
- புறநானூறு 63

சேரன் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற் கிள்ளியும் போர்க்களத்தில்ப் பட்டுக் கிடக்கையில் பரணர் பாடியது. தேரிலே சென்று போர் செய்தோர் அரசனின் சுற்றத்தாரே.ஆதலின் தேர்வரவந்த சான்றோர் என பாடல் கூறுவது அரசகுலத்தவரான சத்திரியரையே.

8.)    “நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம் மறை...”
- பதிர்ற்றுப்பத்து ,இரண்டாம் பத்து, குமட்டூர் கண்ணகனார் பாடியது.

போர் வலிமைமிக்க சத்திரிய வீரர்களின் உடலை மறைக்கும் கவசம் போன்றவன் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. சான்றோர் என்பார் அறிஞர் என்றால் அவர் ஏன் கவசம் அணிய வேண்டும்.

9.)    “கொலக் கொலக் குறையாதத் தானைச் சான்றோர்
வன்மையுஞ் செம்மையும் சால்பும் அறனும்...” பதிற்றுப்பத்து, ஒன்பதாம் பத்து, பாடல் 2.
“தானைச் சான்றோர்” என்ற சொற்றொடர் சேனையிலுள்ள போர்வீரர்களை குறிப்பிடாமல், சேனையை வழிநடத்திய தளபதிகளை,அரசர்களையேக் குறிப்பிடுகிறது. ஆகவே சான்றோர் என்பார் அரசகுலத்தவர் ,சத்திரியர் அல்லாது வேறு யார்?

10.) “மறிந்து தாழ்வன வாசிகள், மாமத வேழம்
தறிந்து வீழ்வன ,தேர்நிரை தகர்வன சான்றோர்
எறிந்த வேலினும் வாளினும் கணையினும் இளைஞர்
துறந்த வாழ்கையை எத்தனை கோடியார் சொல்வார்”
என்பது பாரதம் பாடிய நல்லாப் பிள்ளையின் கூற்று. “இங்கு சான்றோர் எறிந்த வேலினும்,வாளினும்,கணையினும்  ” எனக் கூறப்பட்டுள்ளது. வேலும்,வாளும் அறிஞரிடமும், புலவரிடமும் முதியோரிடமுமா இருக்கும்? அவை பகைஅஞ்சாச் சத்திரியரின் ஆயுதங்களன்றோ.

11.) “கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் ணாணிய சேரலாத
னனிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செலீஇயர்
பெரும்பிறி தாகியாங்கு”
-    என அகநானூறு கூறுகிறது.

“சோழன் கரிகால் வளவனோடு போரிட்டச் சேரலாதன், விழுப்புண்பட்டுத் தோல்வியுற்றான்.அதனால் சாகும்வரை உண்ணாது வடக்கிருந்தான். அவனோடு சான்றோர் சிலரும் வடக்கிருந்து உயிர் துறந்தனர்”.
வடக்கிருத்தல் சத்திரியருக்கு மாத்திரமே உரிய செயலாகும். சத்திரிய குலத்தில் தோன்றாத புலவரோ ,கற்றவரோ வடக்கிருந்ததாக வரலாறில்லை. ஆகவே இப்பாடலில் சான்றோர் வடக்கிருந்தனர் எனக் கூறப்பட்டது. சேரலாதனின் உறவினரான சத்திரியரையே ஆகும்.



சத்திரியன் இறந்தால் வடக்குத் திசையில் தூக்கிச்செல்ல வேண்டும். பிராமணனை கிழக்கிலும்,வைசியனை மேற்கிலும், சூத்திரனை ஊருக்கு தெற்கிலும் எடுத்துசெல்ல வேண்டும். என மனுநூல் தர்மம் வலியுத்துகிறது..

12.) அரசகுலத் தலைமைகள் சீதை  என்பதை “தலைமை சான்றாள்” எனக்கூறும் கம்பன், 
யுத்தகாண்டத்தில், “சான்றார் மாது” என, எண்ணத்தக்க இடங்களில் கூறியுள்ளார்.

13.) “சான்றோரும் அந்தண ரும்புறஞ் சூழத் தமனியப்பூண்
ஈன்றோர் கொடுப்ப எரிகரி யாயிதழ் தாதகியாம்
தோன்றோய் அலங்கல் உறந்தைக் குலோத்துங்கன் சென்னிவெற்பில்”

-    குலோத்துங்க சோழன் உலா, ஒட்டகூத்தர்.

“இளையானும் மடவாளும் விரும்பிக் கொண்டு வந்த
பார்ப்பார் சான்றார் உள்ளிட்டாருங்கூடி..”

-    சீவகசிந்தாமணி ,நாமகளிலம்பகம்,361 வது செய்யுள் உரை.

மேற்கண்ட இரு பாடல்களும் சத்திரியர்,பிராமணர் என்ற பொருளிலேயே பாடப்பெற்றுள்ளன . சான்றோரை கற்றவர் எனப் பொருள் கூறினால், அந்தணர் கல்லாதவர் எனப் பொருள்படுமன்றோ .
இதுபோல எண்ணத்தக்க பண்டைய நூல் ஆதாரங்கள் ,கல்வெட்டு ஆதாரங்கள் சான்றோர் என்ற சொல் வடமொழி சொல்லான சத்திரியர் என்ற சொல்லுக்கு நிகராகனது என்பதை ஆணித்தனமாக உணர்த்துகின்றன.

ஆனால் இன்று நாம் கற்றுத்தேர்ந்தவர்களை எல்லாம் சான்றோர் என்கிறோம்.
தமிழகத்தில் சத்திரிய வர்ணமே கிடையாது என்று வாதிடுவோரும் உள்ளனர்!
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போன்றுதும் , காவிரி நாடன் திரிகைபோல்” என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ,பாயிரத்தில் பாடியிருப்பதன் காரணம் என்ன? காவிரிநாடனான சோழன் சூரிய குலத்தவன் என்பதால் அல்லவா ? அதைப் போன்றே “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், பொங்கு அலர்தார் சென்னி” எனப் பாண்டியனை வாழ்த்தியதும், பாண்டியர் சந்திர குலத்தவர் என்பதனாலே ஆகும்.

பாண்டியரும் , கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் தம்மைச் சந்திரகுலம் என்று கூறிடத் தவறியதில்லை. அவர்களின் செப்பேடுகளும் ‘மதிகுலம்’ என்றேக் கூறுகின்றன. தக்கையாகபரணி சோழரைச் சத்திரியர் எனவும், பாண்டியரை பிரம்மசத்திரியர் அதாவது முதன்மையான சத்திரியர் எனவும் கூறுகிறது.

இதிகாச காலம் முதல் சந்திர ,சூரிய குலங்களே சத்திரிய குலங்களாக அங்கீகரிக்க பட்டிருந்தன. சங்க காலத்தில் சத்திரியரின் ஆட்சிகளே நடைபெற்றுவந்ததால், அவர்கள் தம்மைச் சத்திரியர் என வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் சத்திரியர் அல்லர் என்று பொருளல்ல! இராசசூயம் போன்ற யாகங்கள் அவர்களால் செய்யமுடிந்தமை, சத்திரியர் என்பதாலேயேயாம் . பிற்காலத்தில் பல்லவர் போன்ற வேறு பலரும் ஆட்சிக்கு வரநேர்ந்ததால், தம்மைச் சத்திரியர் எனக் கூரவேந்தியக் கட்டாயம் இவர்களுக்கு ஏற்ப்பட்டது  அதற்காக, வடநாட்டவரை பார்த்துத், தமிழ் மன்னர்களும் சந்திரகுலம், சூரியகுலம் , சத்திரியர் என்றெல்லாம் கூரிக்கொள்ளலாயினர் என்பது அறிவின்மையாகும். இருநூறு, முன்னூறு ஆண்டுகள் கூடத் தாக்குப்பிடிக்காத வடநாட்டு அரசகுலன்களைப் பார்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சேர சோழ பாண்டியர் வேடமிடத் தேவையில்லை. சூத்திர குலங்களும் ,வைசியரும், புறங்கடையில் வந்தோரும் சிற்சில இடங்களில் அதிகாரத்தைப் பிடித்ததால் இவர்கள் சத்திரியர்கள் எனக் கூறிட நேர்ந்தது. ஆகவே தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர் சத்திரியர் என்பதையும் சான்றோர்,சான்றார்  என்ற தமிழ்ச் சொலுக்கு இணையான சொல்லே வடமொழி சொல்லான  “சத்திரியர்” என்பதை உணர்ந்துகொள்ளுதல் அறிவுடமையாம்.


அடுத்த பதிவில் சான்றோரே சத்திரியர் என்பதற்கான ஆதாரமாக, அவர்கள் நடத்திய பண்பட்ட மேம்பட்ட வாழ்கையையும்  சான்றோரின் குணநலன்களாக சங்க நூல்கள் கூறுவதைக் காண்போம்.

3 comments:

  1. ஆதாரத்துடன் பகிருங்கள் அண்ணா, ஆதாரம் இல்லாமல் யாரிடமும் நாங்கள் சத்திரியர்கள் என்று சொல்ல முடியவில்லை , சத்திரியன் குணாதிசயம் நம்மிடம் உள்ளது. ஆனால், அதை வைத்து என்ன பண்ண? ஆதாரம் தான‌ எல்லோரும் கேக்குறாங்க..

    ReplyDelete
  2. ஆதாரத்துடன் பகிருங்கள் அண்ணா, ஆதாரம் இல்லாமல் யாரிடமும் நாங்கள் சத்திரியர்கள் என்று சொல்ல முடியவில்லை , சத்திரியன் குணாதிசயம் நம்மிடம் உள்ளது. ஆனால், அதை வைத்து என்ன பண்ண? ஆதாரம் தான‌ எல்லோரும் கேக்குறாங்க..

    ReplyDelete
  3. அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏

    தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் ஆண்டு 🙏 கீழறைத் தமிழ் ஆண்டு 🙏 ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி 🙏 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை 🙏

    வாழ்க வளமுடன் வளர்க வெல்க செந்தமிழ் நாட்டு பிரபஞ்ச விஞ்ஞான ஆசீவகத் தமிழ்ச் சான்றோர்கள் குலத்தில் வந்த ஆதித்த சந்திர சேர சோழ பாண்டியர்கள் பாண்டவர்கள் நாடாளும் நாடார்கள் அனைத்து மக்களும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வர வேண்டும் மேலும் நமது தமிழ் குடிகளின் அனைத்து மக்களும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வாழ்ந்து வர வேண்டும் 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க பாரத நாடு 🙏 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

    ReplyDelete